திங்கள், 4 மார்ச், 2013

கண்ணாடி வளையல்


அழகான பேரழகி கொஞ்சுத் தமிழ் பேச்சழகி
நான்கு அகவை  கடந்த சிறு அழகி அவள்

தன் செல்ல மொழியில் யுகத்தையே தன்வசமாய்
ஈர்த்தெடுக்கும் வல்லமைக் காரிக்கு தன் தந்தையை
ஈர்க்க கடினமா என்ன !

புரியாத பல  நச்செரிப்பும் கபடமில்லா பொன்சிரிப்பும்
அவளை வீதி உலா கூட்டி வர செய்தது தந்தையை....

இது அவள் நெடு நாள் தொந்தரவு பல நாள் மனக்கனவு...

விடுமுறை நாளை எதிர்நோக்கி  அந்த பிஞ்சின் மனம்,
தந்தையின் உறுதி யின் பேரில்...

இறுதியில்  வந்தது ஞாயிறு உற்சாகமாய் பறந்தாள்
பல நாள் அடைபட்டு விடுபட்ட பட்டாம்பூச்சியாய்...

ஒரு கரம் தந்தையிடம் ஒரு கை தாயிடம் என
இருக பற்றிக்கொண்டு நடுவில் ஆடி வரும் தேர்போல்
மெல்ல ஆடி ஆடி நகர்ந்தாள் அந்த பிஞ்சழகி;

பொருட்காட்சியை வந்தடைந்த சிறு பாவையின்
கண்களில் ஆனந்தம் ஜொலித்தது குதூகலம் குதித்தது

ராட்டினத்தின் சுற்றலிலும் வண்ண ஜால விளக்குகளிலும்
மேலாய் அவளை கவர்ந்திட்டது அந்த கண்ணாடி வளையல்...

வண்ண ஒளியில் மின்னிட்ட அந்த வளையலின் தாக்கம்
அவளை அச்சிறு கடையின் பக்கம் இழுத்தது

தன் மெல்லிய கையின் வீரம் கொண்டு தந்தையை
முன் தள்ளி வாங்கித்தர கோரினாள்  செல்லமாக...

மினுமினுக்கும் கண்ணாடி வளையல் அவளின்
கரத்தில் ஜொலித்தது அவள் இதயம் களித்தது;

சிலுசிலுக்கும் ஓசை வேண்டி கையை குலுக்கிக்கொண்டே
நடந்தாள் அந்த  சின்னழகி;

வளையோசையுடன் தன் சிரிப்பால் போட்டியிட்டாள்
அச் சிறுபல்லழகி;

வீடு நோக்கி செல்கையிலே களிப்பின் உச்சத்தில்
கால் இடறி விழுந்தது  அச்சிறு மொட்டு...

கை ஊணி விழுகையிலே சில்லாய் நொறுங்கியது
கண்ணாடி வளையல் கூடவே உடைந்தது அச்சிறு
பிஞ்சின் இதயம்...

கைத்தூக்கினார் தந்தை விம்மி விம்மி அழுதாள்
அவளோ !

அடிகொண்ட கையை வருடி தேற்றினாள் தாய்;

அவளின் மனதோ காயம்  மறந்து போய்
வளையலின் இழப்பை நாடி அழுதது !
மறு  உலா வரும் நாள் என்று மீண்டும் வருமென
ஏங்கி நகர்ந்தது...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக