திங்கள், 18 பிப்ரவரி, 2013

பெண்ணின் துயரம் அறிவாயா ?




பெண் நாட்டின் கண் என்பார்கள் ஆனால்
அப்பெண்ணின் மீது தான் பலர் கண்...

அழகின் வடிவமாய் பெண்ணைப்
படைத்தது கடவுளின் குற்றமோ?
அல்லது அழகு பதுமைகள் நிறைந்த
உலகில் கயவர்களையும் படைத்தது
கடவுளின் குற்றமோ?

பெண் சிசுக்கொலை குறைந்ததென்று
பெருமூச்சு விடும் வேளையிலே
பெண் காமக் கொலை நிறைந்து கொண்டே
செல்கிறது இப்பூவுலகில்!

காமுகனின் பார்வையிலே கற்பு
என்ன செருப்போ? உன் தேவைக்கு
அணிந்துவிட்டு வீசி எறிய...

மங்கையின் மதிப்பை மங்க செய்யும்
மிருகங்கள் நாட்டில் சுகபோகமாய்
சுற்றித் திரியும் பெருங்கொடுமை
வேறெங்கிலும் உண்டோ ?

உறவென்றால் என்ன வென்று அறியாத
இளம்பிஞ்சுகளை உன் இச்சை தீர்க்க
பலி கொள்ளும் அரக்கர்கள் இவ்வுலகில்
வாழ்ந்து பயனுண்டோ ?

பெண்ணாய் பிறந்தது அஞ்சி மடியவா
என்று மனக்கூச்சலிடும் பெண்கள் தான்
இந்நாட்டில் ஏராளம்!

உன்  காதல் வலையில் சிக்காதது
அவள் தவறா ? இல்லை அவள்  மனம்
விரும்பாததை செய்வது தான் உகந்ததா?
உன் மோகத் தொல்லையில் அவள் படும்
அவஸ்தை தான் நீ அறிவாயா ?

நம் தாய், சகோதரியின் நலம் நாடும் நாம்
பிறர் தாய், சகோதரியை கேடு நினைப்பது
தான் முறையாகுமா ?

என்று தணியும் இந்த சதைப் பித்தும்,
காதலின் பேரிலே பெண்ணைத் துரத்தும்
மோகப் பித்தும் ? எந்நூற்றாண்டில் தான்
பெண் கொடுமை நீங்கும் நாள் வரும் ?

படைப்பு: ராசிக் 

புதன், 13 பிப்ரவரி, 2013

கனவாய் மாறிய காதல் !



அதிகாலை கண்விழித்தேன் அன்று
என்றும் இல்லை அதுபோல்
என்னாயிற்று எனக்கென என்னுள்ளே
வினவியபோது மனம் தந்த பதில்
இன்று உன் நேர்முகத்தேர்வு !

கல்லூரி கடந்து நாள் பல ஆகி
வேலை என் வசம் காதல் கொள்ளாமல்
ஒதுக்கியது என்னை ஆயினும்
அதை விட மனமின்றி இன்றும்
அதன்பின் பயணிக்கிறேன் !

நூல் போன்று வடிந்திட்ட நீரில்
சிறு குளியல் கண்டு வேகவேகமாய்
கசங்கிய சட்டையினை கரம் கொண்டு
நீவி விட்டு நேற்றிட்ட கால்சட்டையினை
அணிந்து கொண்டேன் !

கண்ணாடியில் முகம் கண்டு சிறு
புன்னகை பூக்க  தலை முடி கோரி
எண்ணையின்றி தண்ணீர் பூசி
என்றுமில்லா சிறு அழகு இன்று
கண்ட ஒரு பூரிப்பு என்னுள்..

பையினுள் கைவிட்டு பணம் தேட
கிட்டிய பத்து ரூபாயில் அரையாய்
சுருங்கியது என் பூரிப்பு; இருப்பினும்
வெள்ளைப் பலகை பேருந்தை நம்பி
விறுவென நடந்தேன் நிறுத்தம் நோக்கி!

வயிறு முனங்கியது காலை உணவின்றி
கால்கள் கடுத்தது இருபது நிமிட நடையில்
மீண்டும் குளித்த உணர்வை வியர்வை தந்தது
காலைக் கதிரவன் தலையை வதைத்தது
மனம் பேருந்தை நாடியது;

நிறுத்தம் கடந்து சற்று தூரமாக நின்ற
பேருந்தை நோக்கி கால்கள் ஓடின
படிக்கட்டில் போராடி உள் சென்று
பெருமூச்சு விட்டது இதயம்
தொங்கும் இளசுகளிடையே !

இடைவெளி காணா மாந்தர்களிடையே
கசங்கிய காசினை கடினமாய் எடுத்து
நீட்டியது என் கை பயணச் சீட்டிற்கு
காசோ பயணப்பட்டது  பல கை மாறி
இறுதியில் நடத்துனர் கையில்.

சில நிமிட கடப்பில் பயணச்சீட்டும்
மீதிக் காசும் என்னோக்கி விரைந்தது
என் புறம் வந்தபின் ஒரு கை அதை வாங்கி
என்  முகம் நீட்டியது அக்கணம் என் மனம்
பல யுகம் தாண்டிய ஒரு உணர்வு;

எங்கோ கண்ட முகமோ இல்லை
ஏதோ பிறவியின் இணைப்போ இல்லை
கடவுள் அமைத்த விதியோ இல்லை
நீதான் என்னவளோ என்றெல்லாம் மனம்
கலந்துரையாடியது உள்ளே !

பயணச்சீட்டின் பரிமாற்றத்தில் அவள்
விரல் நுனி என் கையில் பட்ட சில
மணித்துளி என் உடல் என்றும் தந்திடா
பெரும்சுகம் தந்தது. உள்ளம் என்றும் கண்டிரா
கனவு கண்டது;

அவள் பார்வை பட்ட என் கண்களோ
உடன் செயலிழந்தது போலே  மேலும்
மேல் நோக்க திறன் இன்றி கீழ் நோக்கி
தன்னை தாழ்த்திக் கொண்டது ஆயினும்
அவள் முகம் நோக்க துடித்தது  !

அவள் மெல்லிய நீளக் கூந்தல்
காற்றின் வீரத்தால் பறக்க என்
மீது உரசிய ஒரு சில முடிகளால்
நான் மெய் சிலிர்த்துப் போய் காற்றுக்கு
நன்றிக் கடன் பட்டவனானேன்!

மாநிறத்தால் செம்மன பூசிய அவள்
முகமும், கைதேர்ந்த கலைச் சிற்பியின்
படைப்பு  போன்ற அவள் தோற்றமும்
உதட்டின் நுனியில் சிறு சிரிப்பும் என்னை
இன்ப சித்திரவதை செய்தது!

உன் செல்லத் தாக்கம் என்னை
நீ பார்ப்பாயா என ஏக்கம் பெற வைத்து
வாகன இரைச்சலின் இடையினில்
இன்ப மயமாய் பல பின்னணி இசைகள்
காதினில் ஒலித்தது!

அவள் கண் சிமிட்டும் ஒவ்வொரு
நொடியும் என இதய துடிப்போடு
இணைந்து கொண்டு ஒன்றாகி
அவள் இமைப்புகெல்லாம் என் இதயம்
சப்தமிட்டதை செவியுற்றேன் ;

அவள் கால்கள் முன்னோக்கி செல்ல
என் மனம்  நாடாமல் கடவுளை
நாடி அவள் நிறுத்தம் வராமல்
தடுப்பாயா என்றெல்லாம் புலம்பித்
தவித்தது ;

ஒரு கணம் என் எண்ணம் எல்லைத்
தாண்டி கற்பனையில் நீந்தத் தோன்றி
காதலில் மூழ்கித் தவித்து என்னை
கொள்ளை கொண்ட பேரழகியே
என்றெல்லாம் பாடியது!

இவ்வாறு என் காதல் அலையில்
தத்தளித்து மெய்மறந்து கண்ணயர்ந்த
தருணம் ஏதோ ஒரு ஒலி என்னை
இடைமறித்தது  இதுவே இறுதி நிறுத்தம்
இறங்கவேடுமென !

அதிர்ந்து போய் செய்வதறியே தடுமாறி
என் காதல் கோட்டை கற்பனையில்
தகர்ந்து போனதை உணர்ந்து கொஞ்சம்
மிரண்டு மெதுவாய் கீழிறங்கினேன்
பேருந்தை விட்டு!

என்னவளின் மோகத்தில் அவள்
முகத்தில் மதி மயங்கி என் நேர் முகத்
தேர்வை தொலைத்த போதிலும்
அவள் காலடி எந்த நிறுத்தத்தில்
பதிந்ததென்றே மனம் தேடியது !!!


படைப்பு: ராசிக் 

திங்கள், 11 பிப்ரவரி, 2013

என் ஹைக்கூ கவிதை தொகுப்பு !


மின் சக்தி  

முழு மின்வெட்டு நேரம் 
தொட்டதும் பாய்ந்தது மின்சாரம் 
அவள் கையை!

புதிய வீடு 

பல வருட  பாசத்திற்கு 
பரிசாக புதிய வீடு 
முதியோர் இல்லம்!

வானப் பந்தல் 

வெயிலின் உச்சத்தை 
காக்கும் வானப் பந்தல் 
மேக மூட்டம்!

தலையணை 

சோகத்தை மறந்து தூங்க 
சுகமான தலையணை... 
அன்னையின் மடி; 

எடை தாங்கி! 

நான் பறந்து விடுவேனன்று தான் 
நீ என்மேல் இருக்கிறாயோ? 
பூமி மலையிடம்...

பிஞ்சு மனம் 

நம் கவலையிலும் 
நம் சோகத்திலும் 
ஆனந்தமாய் 
நம் சிறு குழந்தைகள் !

மழை நீர் 

விவசாயிகளின் ஏழ்மை கண்டு 
கடவுளின் கண்ணீர்...
மழை !

முத்தம் 

அன்னையின் பாச மருந்து 
இளமையின் ஊக்க மருந்து 
முத்தம் !

பிறப்பு -இறப்பு 

வந்த நாள் நம் அழுகையுடன்...
போகும் நாள் பிறர் அழுகையுடன் ...

இரவு 

மனிதனின் இன்பத்திற்கு 
கடவுள் அமைத்த ரகசிய 
கூடம்;

மரப்பட்டை
தான்  வெட்டப்பட்டாலும் 
மானமாகவே மடிகிறது மரம்
தன் ஆடையுடன் !

பசிக்கொடுமை 

எதுவும் விளையாத 
சமவெளிப் பகுதி 
ஏழையின் வயிறு ;

எழுத்துப் பிழை 

நம் வாழ்க்கை புத்தகத்தில் 
கடவுளின் எழுத்துப் பிழை 

ஊனம்....

கவிதை 

சிந்தனை தோட்டத்தில் 
கவிஞனின் விதை;

அணுகுண்டு 

அறிவியலின் படைப்பில் 
பூகம்பம்...


படைப்பு: ராசிக் 

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பிரிவின் ஏக்கம்





"இது கடல் கடந்து, மைல் கடந்து போய்  பணி புரிந்து கொண்டு   நம் உறவை தேடும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்!!!"

உலகம் இயந்திரமாய் சுழலும்
இவ்வேக மயத்திற்கு இடையே
நம் இடை விடா பணிக்கு இடையே
அன்னையின் முகம் தேடும் மனம்
அந்த சில மணித்துளிகள் !

பல மைல் கடந்து இல்லை கடல் கடந்து
நம் உடமைகளை உறவுகளை விட்டு
நம்  இனம் சாரா நம் மொழி சாராருக்கு
கீழாய் இல்லை அடிமையாய் செல்ல
நேர்வது மிகக் கொடுமை;

வார ஐந்து இல்லை ஆறு நாட்கள்
அதிகாலை முதல் இரவு  வரை
அணியில் இணங்கி பணியில் முடங்கி
கட்டாயமாய் களைத்து போக விடுகிறது
நம் பணத் தேவை;

நம் கடினம் அறியா நம் சோகம் அறியா
நம் நலம் மட்டுமே தேடும் குடும்ப
உறவுகள் அக்கரையில் கலங்க
அவர்கள் நலம் மட்டுமே நாடும்
நாம் இக்கரையில் உரைகிறோம்;

நாள்முழுதும் பல சுவையாய் மணமாய்
உணவு கண்ட நம் நாவு இன்று
வறண்ட பூமியின் நீர் ஏக்கம் போல்
நம் வீட்டு  உணவுகளை புசிக்க
ஏங்கி துவண்டு நிற்கிறது;

எச்சமயம் என்னாகுமோ ஏதாகுமோ
என்ற படபடப்பு நம் மனதிலும் நம்
உறவுகள் மனதிலும் உட்கொண்டு
தினம் தினம் நடுங்க வைக்கிறது
அந்த இடைவெளி தூரம்;

நம் உறவுகள் நிம்மதியாய் அங்கே
உறங்க நாம்  நாள்தோறும்  இங்கே
உறக்கம் குறைத்து இல்லை
உறக்கம் தொலைத்து படும் வேதனை
சொல்ல வார்த்தைகள்  இல்லை!

மனைவியின் நெருக்கமின்றி
குழந்தையின் கொஞ்சல்கள்  இன்றி
அன்பினை தள்ளி வைத்து பாசப் பிரிவினை
எண்ணி ஏங்கியே நாம் நாட்களை
தொலைப்பது மிகவும் அனுதாபம்;

நம் நலன் நோக்கி முன்பு அன்னையோ
தகப்பனோ திட்டிய சொற்களில்
வீறு கொண்ட நாம் இன்று
எவன் ஏச்சுக்கேல்லாம் கைகட்டி
வாய்பொத்தி பணிகிறோம்;

சுதந்திர பறவை போல் சிறகடித்து
பறந்த நாட்கள் போய் சிறகொடிந்த
பறவையாய் சிறைப்பட்டுக்  கொண்டு
வெளிவரும் நாட்கள் தேடி நாம்
விம்மி கொண்டிருக்கிறோம்;

வீடு செல்லும் நேரம் என்று வரும் என்ற
எதிர்பார்ப்பில் நம்  ஒவ்வொரு நாளும்
பொழுதும் மிதவை கப்பல் போல்
மெதுவாக நகர்ந்து செல்லும்
அந்த உணர்வு கொடியது !

தேய் பிறை போல் நாம் தேய்ந்து
நம் உழைப்பின் உச்சத்தை செலுத்தி
நம் நேச உறவுகளை வளர்பிறை போல்
வளர்ப்பதில் நாம் கிட்டும் மகிழ்ச்சி
மட்டுமே இதில் மிச்சம் !


படைப்பு: ராசிக்



வியாழன், 7 பிப்ரவரி, 2013

தயக்கமும் சோம்பலும்...


உன்னுள் உதிக்கும் சிந்தனைகள் வெளிவர
வழி தேடி மனதில் முட்டிக் கொள்ளும்

உன் தாழ்வு மனப்பாண்மை அதை வெளிக்
கொணராமல் அணைப் போட்டுக் கொள்ளும்

என்னால் முடியுமோ? என்றெண்ணமே உன்னை
அடக்கியாண்டு கட்டிக் கொள்ளும்

பிறர் ஏசல்களுக்கு செவியேற்க மனமின்றி உன்
படைப்புகள் பதுங்கிக் கொள்ளும்

நாளை என்றொரு மறு வாய்ப்பு இருப்பதாலோ
வெற்றி உன்னை  தள்ளிக் கொள்ளும்

ஒரு சில அடிகளில் மனம் வெறுப்பதால் உன்
முயற்சி பாதியில் முடங்கிக் கொள்ளும்

ஆதியிலேயே வெல்ல வேண்டுமென்ற உணர்வு
உன் திறமையை மறுத்துக் கொள்ளும்

தோல்வி கண்டால் என்னாகுமோ எனும் அச்சம்
உன் உருவாக்கலை தடுத்துக் கொள்ளும்

தயக்கமெனும் பெரும் நோய் தொற்றிக் கொண்டு
உன் வளர்ச்சியை நிறுத்திக் கொள்ளும்

சோம்பலெனும் மறு நோயும் பற்றிக் கொண்டு
உன்னையே மறைத்து கொள்ளும்


ராசிக்...

முதல் கவிதைக்கு கவிஞனின் பாராட்டு!

என் முதல் கவிதை குழந்தைக்கு கவிஞர் கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்களிடமிருந்து கிடைத்த பாராட்டையும் அவர்களின் கருத்தையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது என்னை மேலும் செம்மைப் படுத்த மிக்க உதவியாக இருக்கும். இதற்காக கவிஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் இது போன்ற பல படைப்புகளை கொடுக்க இது ஊக்கமளிக்கும் விதமாகவும் பல கவிஞர்களின் படைப்புகளை படிக்க ஆர்வமளிக்கும் விதமாகவும் இருக்கின்றது. 

இதோ கவிஞர் நிரஞ்சன் பாரதி அவர்களின் பாராட்டுகளும் என் முதல் கவிதையின் பிழைகளும் !!!

"நல்ல முயற்சி. பாராட்டுகள்.

முதல் சில வரிகள் மிகவும் பெரிதாக இருக்கின்றன. அந்த மாதிரி இருப்பதால் கொஞ்சம் உரைநடை சாயல் அடிக்கிறது. அடுத்து வரும் வரிகள் சிறிதாக இருக்கின்றன. கவிதை முழுவதும் ஒரு UNIFORMITY இருந்தால் நன்றாக இருக்கும்.

முதல் அடியில் ,

"கிடைப்பது கிடைக்காமல் அதனால் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்"

என்று எழுதுவதற்கு பதிலாக கிடைப்பது "கிடைக்காமல் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்" என்று சுருக்கலாம்.

பிறகு,

"எம்மண்ணில் எமக்கு வாழ தகுதியில்லையோ என்றெண்ணும் வகையில் உம் அடக்குமுறைகளை எம்மீது ஏவ
உரிமைகள் ஏதுமின்றி உமக்கு அடிமையாய் நாம் சாவ"

இவ்வளவு பெரிய வரிகளைத் தவிர்க்க வேண்டும். ஏவ என்பதற்கு எதுகையாய் சாவ என்று எழுதியிருக்கிறீர்கள். ஏவ என்பது நல்ல தமிழ். சாவ என்பது கொச்சைத் தமிழ். இதையும் நீங்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தக் கவிதையில் யாரை எதிர்த்து போராடுகிறீர்கள் என்ற தெளிவு இல்லை. படத்தைப் பார்த்தால் ஆங்கிலேயர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரை அடக்குகிறார்கள் என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரு நல்ல கவிதை என்பது பதிவாகவும், படைப்பாகவும் இருக்க வேண்டும்.

உங்கள் கவிதை ஒரு நல்ல பதிவாக இருப்பினும் படைப்பாக இல்லை என்பது என் கருத்து.

முதல் கவிதை என்பதால் போகப் போகச் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். அதற்கு நீங்கள் பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரை நிறைய படிக்க வேண்டும். 

தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துகள்."

என் கவிதை வரிகள் இங்கே...

புதன், 6 பிப்ரவரி, 2013

போராடுதல் !



கிடைப்பது கிடைக்காமல் அதனால் மனதினுள் அடக்கிடும் பேரிடிகளும்
எம்மினம் உம்மால் ஒடுக்கப்பட்டு அதனால் கிட்டிடும் பல அடிகளும்


கண்ணுறங்காமல் எம்மக்களை நாம் காக்க நினைக்க  
தங்கள் பல  பலத்தால் நீங்கள் எங்களைத் தாக்க  நினைக்க

எம்மண்ணில் எமக்கு வாழ தகுதியில்லையோ என்றெண்ணும் வகையில் உம் அடக்குமுறைகளை எம்மீது ஏவ
உரிமைகள் ஏதுமின்றி உமக்கு அடிமையாய் நாம் சாவ


உண்ண உறங்க இடமின்றி எங்கெங்கோ யாம் ஓடோட
விடாமல் துரத்தி எங்கள் உயிர்களைப் பறிக்க நீ நாட

பதட்டமே எம்  வாழ்க்கையாய் நீ மாற்றினாய்
உன் வலிமை கண்டு உம்மை நீயே போற்றினாய்

எம் வளர்ச்சியில்  நீ அச்சம் கொண்டு கருவறுக்க நினைத்து
எம் சந்தோசம் கலைத்து நீ உம்மை வளர்த்தாய்

அடி பல கண்டு கண்டு எம் சொந்த  பந்தங்கள்  இழந்து
மேலும் இழக்க ஏதுமின்றி  திக்கு தடுமாறி களைத்து

உம்  சர்வாதிகாரத்தை அடக்க எம் அதிகாரத்தை கையில் எடுத்து
உம் போக்கை முடக்க போராடுவோம் !!!

இது மறதியா இல்லை மறக்கடித்தலா ?

ஒவ்வொருமுறை பயங்கரவாதமும் தீவிரவாதமும் இன்னபிற வாக்கு வாதமும் நம் நாட்டில் விஸ்வரூபமெடுத்து நின்ற பொழுதெல்லாம் அதை நினைத்து மனம் வெம்பி ரௌத்திரம் கொள்ளும் சிலபேர்களும் அதை கண்டும் காணாததுமாய் அமைதி கொள்ளும் பலபேர்களும் மீண்டும் மற்றுமொரு விவகாரம் இடைமறித்துக் கொள்ளும் பொழுது முந்தய நிகழ்வுகளை அடியோடு மறந்து விடும் ஒரு அற்புத உணர்வு நம்மனைவரையும் ஆட்டிபடுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு பெயர் மறதியா இல்லை மறக்கடித்தலா என்பது இன்னும் தெளிவாக புலப்படவில்லை. 

நாட்டில் தலைவிரித்தாடும் ஒவ்வொரு பிரச்சனைகளும் ஒரு தருணத்தில் அடியோடு மறக்கடிக்கப்பட்டு விடுகிறது இதன் காரணமாகவோ என்னோவோ இதுவரையில் எந்த ஒரு பிரச்சனைகளும் நிரந்தர தீர்வடைந்ததாக தெரியவில்லை. அதைப்போன்று பல நேரங்களில் பிரச்சனைகள் சிலரால் உருவாக்கப்படுவது போலும் தோன்றுகிறது, நாட்டில் உலவும் சில அடிப்படை பிரச்சனைகளை   மூடி மறைப்பதற்காக வேறு சில பிரச்சனைகள் உருவாக்கப்படுவதால் முந்திய பார்வை அதை விட்டு நகர்ந்து இதில் தொற்றிக்கொள்கின்றது. மனம் ஒரு குரங்கு என்ற கூற்றுக்கேற்ப நம் மனம் தாவிக்கொன்றே செல்கின்றது இதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி நம் மனம் பெரிதாக ஏதும் சிந்திக்க தோன்றவில்லை. இந்த ஒரு மாயப் பணியை செம்மன செய்யும் வித்தை காரர்களாக இருக்கிறார்கள் உயரிய அரியணையில் இருக்கும் சி(ப)ல பேர். அதை சற்றும் புரிந்து கொள்ள இயலாத அப்பாவிகளாக இருக்கிறார்கள் நம்மக்கள்... 

திசை மாற்றுதல் என்பது ஒரு நற்செயல், ஒருவன் செல்லும் பாதை தீங்கானதாக தோன்றும் தருணம் அவனை சரிபடுத்தி நேர் வழி காட்டுதல் அவனை நல்வழிப் படுத்தும் ஒரு மேன்மையான செயல்  ஆனால்  மாறாக திசை மாற்றுதல் ஒரு கொடிய செயலாக காட்டும் இடமாக இதுபோன்று துர்காரியங்கள் இருக்கின்றது. அவ்வாறு திசை மாற்றி நம்மை மறக்கடிக்கும் கயவர்களாகத் தான் நம் தேசத்தை ஆள்பவர்களும் இருக்கிறார்கள். இந்த மறதி என்னும் வியாதி நம்மை விட்டு அகன்று செல்லும் வரை நாம் மறக்கடிக்கப் பட்டுக் கொண்டு தான் இருப்போம் என்பதில் ஐயமில்லை!

அணு விதைத்த பூமியிலே! விஸ்வரூபம் பாடல் வரிகள் !



கமல் அவர்களின் விஸ்வரூபம் படத்தில் தானே எழுதி பாடிய இந்த பாடலின் வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது ! அதன் முழு வரிகள் இங்கே...

அணு விதைத்த பூமியிலே
அறுவடைக்கும் அணு கதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்று வரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா...

கருவறையும் வீடல்ல கடல் சூலலதுவும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா...