செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னது சாக்லேட்டில பல்லா ?


அன்று என் வீட்டில் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தேன் அருகில் என் 10 வயது  சித்தப்பா பையன் அமர்ந்துகொண்டு என் மச்சான் வாங்கி தந்த டைரி மில்க் சாக்லேட்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் திடீரென்று சாக்லேட்டில் பல் இருக்கிறது என்று எடுத்து கீழே போட்டான் நான் சற்று அதிர்ந்து போய் என்னது சாக்லேட்டில பல்லா என்று அவன் வாயைப் பார்த்தேன் அவன் வாயெல்லாம் ஒரே ரத்தம். எனக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை அடப்பாவி எதோ பாதாம் பிஸ்தா என்று நினைத்து உன் பல்லையும் கடித்து துப்பியிருக்கிராயே என்று நினைத்துக் கொண்டு  அது உன் பல் தாண்டா என்றேன். அவன் நம்பவில்லை உடனே கண்ணாடியை எடுத்து காட்டியவுடன் வாயைப் பொத்திக்கொண்டு ஓடினான் கழுவுவதற்கு. பின்பு  அந்த நிகழ்வை வீட்டில் இருந்த அனைவரும்  அறிந்து அதை நினைத்து நினைத்து சிரித்தனர் அடக்கமுடியாமல்  !!!

செவ்வாய், 6 நவம்பர், 2012

பண்டிகை வந்தாலே பஸ் காரர்களுக்கு கொண்டாட்டம் தான் !!!


ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், போன்ற முக்கியமான பண்டிகைகள் வந்தாலே போதும், பண்டிகை களை கட்டுகிறதோ இல்லையோ பஸ் காரர்களுக்கு நல்ல கல்லா கட்டிவிடும். இதனாலையே அனைவரின்  முதல் முன்னுரிமை இரயிலில் முன்பதிவு செய்வதிலேயே இருக்கும் ஆனால் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வதென்பது சாதாரண விசயமல்ல. இது வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் பணி செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றாகவே விளங்கிய ஒன்று. இதன் காரணமாக பண்டிகை வருகிறது என்றாலே தன் ஊர்களுக்கு செல்ல  முன்கூட்டியே காலண்டரில் தேதிகளை குறித்து ரயிலில் புக் செய்ய தொடங்கிவிடுவார்கள் இணையம் வழியாகவோ அல்லது நேரில் சென்றோ நம் பாவப்பட்ட அயலூர் வாசிகள். ஆனால் கொஞ்சம் நேரம் தவறிவிட்டால் அவ்வளவு தான் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்க வேண்டும். பின்பு அனைவரும் வேறு வழியில்லாமல் நாடும் ஒரே வழி பஸ் தான்.

பஸ்ஸிலே இரண்டு  வகை ஒன்று நம்ம அரசு பஸ் மற்றொன்று நம் அனைவரும் அறிந்த பிரைவேட் ஆம்னி பஸ்கள், இதில் பெரும்பாலானவர்களின் முதல் சாய்ஸ் பிரைவேட் பஸ்ஸில் பயணம் செய்வதிலையே இருக்கும் காரணம் அதில் இருக்கும் சௌகர்யம் தான். முதலில் அரசு பஸ்சுக்கும்  பிரைவேட் பஸ்சுக்கும்  பயண கட்டணத்தில்  பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, இன்றைய அம்மா ஆட்சியில் வந்த வேகத்தில் முதலில் அரசு  பஸ் கட்டணத்தை உயர்த்தியதே அவர்கள் முதல் சாதனையாக கருதப்படுகிறது. அடுத்து பயண நேரம், அரசு பஸ் என்று பார்த்தால் அவர்கள் நின்று செல்லாத ஸ்டாப் களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெயர்பெற்றது. இன்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி பயணம் செல்வதற்கு அரசு பஸ்ஸில் ஏறினால் அடுத்த நாள் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்று விடலாம் என்கிற அளவிற்கு அதீத வேகம் கொண்டது. அதற்கு மேல் அல்ட்ரா டீலக்ஸ் என்றும் புஷ் பேக் என்றும் செமி ஸ்லீப்பர் என்றும்  பெயரில் இருந்தாலும்  அதன் செயல்பாடு நம் பயணிகளை நிஜமாகவே கடுப்பேத்த வைக்கும் என்பதில் ஐயமில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிகளைக் கொண்ட அரசு பஸ்கள் இப்பொழுது வெறும் தொலைகாட்சி இருந்த பெட்டிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கண்குளிர வைக்கிறது. இன்னும் நம் அரசு பஸ்சின் பெருமைகளை சொல்ல சொல்ல நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். அதனாலையே பெரும்பாலும் பிரைவேட் ஆம்னி  பஸ் களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் நம் பயண வாசிகள். பிரைவேட் பஸ்கள் அனைத்து விதத்திலும் அரசு பஸ்களை விட சிறந்த தாகவே இருக்கிறது என்பது யாவருமறிந்த உண்மை. 

இது போன்ற காரணங்களினால் பிரைவேட் பஸ்களை நாடும் நம் மக்களை பண்டிகை காலங்களில் ஒரு கை பார்த்து விடுவார்கள் நம் பிரைவேட் பஸ் ஏஜன்ட்டுகளும்  சில ஊழியர்களும். முன்னதாகவே சில இருக்கைகளை பிளாக் செய்துவிடும் அவர்கள் பண்டிகைகள் நெருங்கிவிடும் போது கூடுதல் கட்டணமாகவும் சமயத்தில் இரு மடங்கு கட்டணமாகவும் வாங்குகிற அளவிற்கு நல்லெண்ணம் கொண்டவர்கள் அவர்கள். வேறுவழியில்லாத காரணத்தினாலும், வீட்டிற்க்கு சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினாலும்  அரசு பஸ்ஸில் செல்வதற்கு பதில் இதில் அதிக காசு கொடுத்து செல்வது எவ்வளவோ மேல் என்று எண்ணி அதிக கட்டணத்தில் பயணம் செய்யும் அப்பாவி பயணிகளை காண்கிறோம். 

இத்தகைய அனைத்து இன்னல்களுக்கும் அரசே பொறுபேற்க வேண்டிய நிலைமை இன்று நிலவி வருகிறது. அரசு பஸ்களின் சேவைகளையும், அதன் தரத்தையும், செயல்பாடுகளையும் மெருகேற்றாத வரை இந்த நிலைமை நீடிக்கவே செய்யும். மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் பஸ் களின் மீதும், அதற்கு காரணமான வர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டளை பிறப்பிப்பதோடு மட்டுமில்லாமல் அதனை செயல் படுத்தியும் காட்ட வேண்டும். 

மேலும் பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் ஆம்னி பஸ்கள் மீது அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் செய்ய 044-24794709, 94448 55428, 94440 15958 என்ற தொலைப்பேசி எண்களை  தொடர்பு கொள்ளலாம். இனிமேலாவது இது போன்ற துயரங்கள் இல்லாமல் மக்கள் நிம்மாதியாக பயணம் செய்திட அரசு உதவ வேண்டும். 


திங்கள், 5 நவம்பர், 2012

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளில் வெளியான நெஞ்சுக்குள்ளே பாடல்...


இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த படைப்பான 'கடல்' திரைப்படத்தின் ஒரு பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் Mtv யின் சிறப்பு நிகழ்வில் பாடினார். நெஞ்சுக்குள்ளே என தொடங்கும் அப்பாடல் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சி சனிக்கிழமை இரவு Mtv யில்  நேரடியாக ஒளிபரப்பானது மற்றும் Mtv  இணைய தளத்திலும் ஒளிபரப்பப்பட்டது.

மனதிற்கு இதமான அந்த மெலடி ரக பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது மேலும் சமூக வலைதளங்களிலும் அந்த பாடல் உலா வரத்  தொடங்கியுள்ளது. இந்த பாடலின் அதீத வரவேற்ப்பின் காரண மாக கடல் படத்தின் மீதமுள்ள பாடல்களைக் கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.  இந்நிகழ்ச்சியின் பிறகு ட்விட்டரில் எழுதியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் . இப்படியொரு பாராட்டுக்கள் கிடைக்கும் என்று தான் எதிபார்க்கவில்லை என்றும்  அனைவருக்கும் தனது நன்றியினையும்  தெரிவித்துள்ளார்.

கடல் திரைப்படத்தின் மூலம், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், வைரமுத்து கூட்டணி மீண்டும் கை கோர்த்துள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கதாநாயகனாக வும் நடிகை ராதா வின் இளைய மகள் துளசி கதாநாயகியாகவும்  அறிமுகம் ஆகிறார்கள். 

ஏ.ஆர்.ரஹ்மான் MTV நிகழ்ச்சியினைக் காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்...


தமிழின் பிறப்பிடம் குமரிக்கண்டம் !!!


தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. பி.டு. சீனிவாசய்யர், திரு சேசையர் திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும், நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம், கையாண்ட மொழி தமிழ் திராவிட மொழியாகும். பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும், தமிழனும், புகழின் உச்சக்கட்டம் எட்டினர். பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக் காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும்

பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிட நாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும் உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும், கல்வெட்டுக்களும் உதவுகின்றன.

தகவலுக்கு நன்றி:  பேஸ் புக் பக்கம்

வெள்ளி, 2 நவம்பர், 2012

முதல் பதிவு: கொஞ்சம் என்னைப் பற்றி...


சுமார் ஒரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் பிளாக் பற்றி அறிந்ததாக ஒரு சிறு நியாபகம். அப்பொழுது அதைப்பற்றி முழுதாக அறிந்து கொள்ள எந்த ஒரு தேவையும் இல்லை விருப்பமும் இல்லை. காலப்போக்கில் இணையத்தின் வளர்ச்சியால் நான் அதை விட்டு விலகி இருந்தாலும் அது என்னை மெது மெதுவாக தொற்றிக்கொண்டது. எனக்கு பொதுவாக எழுதுவது என்றாலே கொஞ்சமும் விருப்பம் இல்லை அதனால் எதுவும் எழுவதும் இல்லை அதனாலோ என்னவோ நம்முள் உதிக்கும் சிறு சிறு சிந்தனைகளும் உணர்வுகளும் அப்படியே மறைந்து போய் விடுகின்றது. அதன் ஆர்வத்தினால் 2  வருடங்களுக்கு முன்பு ப்ளாக் ஒன்றை தொடங்கி ஆங்கிலத்தில் எழுதி வந்தேன். எதோ போதாத காலம் அது ஒரு   இலவச ஹோஸ்டிங் என்பதால் என் அக்கவுண்டை டெலிட் செய்து விட்டார்கள். அதன் பிறகு அதன் மேல் அதிக ஆர்வம் இல்லாமல் இருந்தது.

இப்போது மீண்டும் மெதுவாக ப்ளாக் ஆர்வம் துளிர் விட்டிருக்கிறது, அனைவரையும் என் எழுத்தால்  கவர்ந்திழுக்கும் அளவிற்கு நான் ஒரு எழுத்தாளன் இல்லை என்பது தான் உண்மை இருந்தாலும் எழுதுவதினால்  எனக்குள்ளும் ஏதோ சிந்தனைகள்  தோன்றலாம் என்ற பேராசையினால் எனக்கு நன்கறிந்த தமிழ் மொழியை கையில் எடுத்து இந்த இணையத்தில் காலெடுத்து வைக்கின்றேன்.

டைம் பாஸ் பண்ணுகின்ற அளவிற்கு எனக்கு டைம் இல்லையென்றாலும் ப்ளாக் எழுதி  கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம் என்ற நோக்கோடு.....


ராசிக்...