செவ்வாய், 6 நவம்பர், 2012

பண்டிகை வந்தாலே பஸ் காரர்களுக்கு கொண்டாட்டம் தான் !!!


ஒவ்வொரு வருடமும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், போன்ற முக்கியமான பண்டிகைகள் வந்தாலே போதும், பண்டிகை களை கட்டுகிறதோ இல்லையோ பஸ் காரர்களுக்கு நல்ல கல்லா கட்டிவிடும். இதனாலையே அனைவரின்  முதல் முன்னுரிமை இரயிலில் முன்பதிவு செய்வதிலேயே இருக்கும் ஆனால் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்வதென்பது சாதாரண விசயமல்ல. இது வெளியூர்களில் இருந்து வந்து சென்னையில் பணி செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றாகவே விளங்கிய ஒன்று. இதன் காரணமாக பண்டிகை வருகிறது என்றாலே தன் ஊர்களுக்கு செல்ல  முன்கூட்டியே காலண்டரில் தேதிகளை குறித்து ரயிலில் புக் செய்ய தொடங்கிவிடுவார்கள் இணையம் வழியாகவோ அல்லது நேரில் சென்றோ நம் பாவப்பட்ட அயலூர் வாசிகள். ஆனால் கொஞ்சம் நேரம் தவறிவிட்டால் அவ்வளவு தான் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் இருக்க வேண்டும். பின்பு அனைவரும் வேறு வழியில்லாமல் நாடும் ஒரே வழி பஸ் தான்.

பஸ்ஸிலே இரண்டு  வகை ஒன்று நம்ம அரசு பஸ் மற்றொன்று நம் அனைவரும் அறிந்த பிரைவேட் ஆம்னி பஸ்கள், இதில் பெரும்பாலானவர்களின் முதல் சாய்ஸ் பிரைவேட் பஸ்ஸில் பயணம் செய்வதிலையே இருக்கும் காரணம் அதில் இருக்கும் சௌகர்யம் தான். முதலில் அரசு பஸ்சுக்கும்  பிரைவேட் பஸ்சுக்கும்  பயண கட்டணத்தில்  பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை, இன்றைய அம்மா ஆட்சியில் வந்த வேகத்தில் முதலில் அரசு  பஸ் கட்டணத்தை உயர்த்தியதே அவர்கள் முதல் சாதனையாக கருதப்படுகிறது. அடுத்து பயண நேரம், அரசு பஸ் என்று பார்த்தால் அவர்கள் நின்று செல்லாத ஸ்டாப் களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெயர்பெற்றது. இன்று இரவு சென்னையில் இருந்து கன்னியாகுமரி பயணம் செல்வதற்கு அரசு பஸ்ஸில் ஏறினால் அடுத்த நாள் மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு சென்று விடலாம் என்கிற அளவிற்கு அதீத வேகம் கொண்டது. அதற்கு மேல் அல்ட்ரா டீலக்ஸ் என்றும் புஷ் பேக் என்றும் செமி ஸ்லீப்பர் என்றும்  பெயரில் இருந்தாலும்  அதன் செயல்பாடு நம் பயணிகளை நிஜமாகவே கடுப்பேத்த வைக்கும் என்பதில் ஐயமில்லை. முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிகளைக் கொண்ட அரசு பஸ்கள் இப்பொழுது வெறும் தொலைகாட்சி இருந்த பெட்டிகளை மட்டுமே வைத்துக் கொண்டு கண்குளிர வைக்கிறது. இன்னும் நம் அரசு பஸ்சின் பெருமைகளை சொல்ல சொல்ல நம்மை மெய் சிலிர்க்க வைக்கும். அதனாலையே பெரும்பாலும் பிரைவேட் ஆம்னி  பஸ் களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் நம் பயண வாசிகள். பிரைவேட் பஸ்கள் அனைத்து விதத்திலும் அரசு பஸ்களை விட சிறந்த தாகவே இருக்கிறது என்பது யாவருமறிந்த உண்மை. 

இது போன்ற காரணங்களினால் பிரைவேட் பஸ்களை நாடும் நம் மக்களை பண்டிகை காலங்களில் ஒரு கை பார்த்து விடுவார்கள் நம் பிரைவேட் பஸ் ஏஜன்ட்டுகளும்  சில ஊழியர்களும். முன்னதாகவே சில இருக்கைகளை பிளாக் செய்துவிடும் அவர்கள் பண்டிகைகள் நெருங்கிவிடும் போது கூடுதல் கட்டணமாகவும் சமயத்தில் இரு மடங்கு கட்டணமாகவும் வாங்குகிற அளவிற்கு நல்லெண்ணம் கொண்டவர்கள் அவர்கள். வேறுவழியில்லாத காரணத்தினாலும், வீட்டிற்க்கு சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினாலும்  அரசு பஸ்ஸில் செல்வதற்கு பதில் இதில் அதிக காசு கொடுத்து செல்வது எவ்வளவோ மேல் என்று எண்ணி அதிக கட்டணத்தில் பயணம் செய்யும் அப்பாவி பயணிகளை காண்கிறோம். 

இத்தகைய அனைத்து இன்னல்களுக்கும் அரசே பொறுபேற்க வேண்டிய நிலைமை இன்று நிலவி வருகிறது. அரசு பஸ்களின் சேவைகளையும், அதன் தரத்தையும், செயல்பாடுகளையும் மெருகேற்றாத வரை இந்த நிலைமை நீடிக்கவே செய்யும். மேலும் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் பஸ் களின் மீதும், அதற்கு காரணமான வர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கட்டளை பிறப்பிப்பதோடு மட்டுமில்லாமல் அதனை செயல் படுத்தியும் காட்ட வேண்டும். 

மேலும் பயணிகள் அதிக கட்டணம் வசூலிக்கும் பிரைவேட் ஆம்னி பஸ்கள் மீது அரசு போக்குவரத்து கழகத்தில் புகார் செய்ய 044-24794709, 94448 55428, 94440 15958 என்ற தொலைப்பேசி எண்களை  தொடர்பு கொள்ளலாம். இனிமேலாவது இது போன்ற துயரங்கள் இல்லாமல் மக்கள் நிம்மாதியாக பயணம் செய்திட அரசு உதவ வேண்டும். 


0 கருத்துகள்:

கருத்துரையிடுக