புதன், 13 பிப்ரவரி, 2013

கனவாய் மாறிய காதல் !



அதிகாலை கண்விழித்தேன் அன்று
என்றும் இல்லை அதுபோல்
என்னாயிற்று எனக்கென என்னுள்ளே
வினவியபோது மனம் தந்த பதில்
இன்று உன் நேர்முகத்தேர்வு !

கல்லூரி கடந்து நாள் பல ஆகி
வேலை என் வசம் காதல் கொள்ளாமல்
ஒதுக்கியது என்னை ஆயினும்
அதை விட மனமின்றி இன்றும்
அதன்பின் பயணிக்கிறேன் !

நூல் போன்று வடிந்திட்ட நீரில்
சிறு குளியல் கண்டு வேகவேகமாய்
கசங்கிய சட்டையினை கரம் கொண்டு
நீவி விட்டு நேற்றிட்ட கால்சட்டையினை
அணிந்து கொண்டேன் !

கண்ணாடியில் முகம் கண்டு சிறு
புன்னகை பூக்க  தலை முடி கோரி
எண்ணையின்றி தண்ணீர் பூசி
என்றுமில்லா சிறு அழகு இன்று
கண்ட ஒரு பூரிப்பு என்னுள்..

பையினுள் கைவிட்டு பணம் தேட
கிட்டிய பத்து ரூபாயில் அரையாய்
சுருங்கியது என் பூரிப்பு; இருப்பினும்
வெள்ளைப் பலகை பேருந்தை நம்பி
விறுவென நடந்தேன் நிறுத்தம் நோக்கி!

வயிறு முனங்கியது காலை உணவின்றி
கால்கள் கடுத்தது இருபது நிமிட நடையில்
மீண்டும் குளித்த உணர்வை வியர்வை தந்தது
காலைக் கதிரவன் தலையை வதைத்தது
மனம் பேருந்தை நாடியது;

நிறுத்தம் கடந்து சற்று தூரமாக நின்ற
பேருந்தை நோக்கி கால்கள் ஓடின
படிக்கட்டில் போராடி உள் சென்று
பெருமூச்சு விட்டது இதயம்
தொங்கும் இளசுகளிடையே !

இடைவெளி காணா மாந்தர்களிடையே
கசங்கிய காசினை கடினமாய் எடுத்து
நீட்டியது என் கை பயணச் சீட்டிற்கு
காசோ பயணப்பட்டது  பல கை மாறி
இறுதியில் நடத்துனர் கையில்.

சில நிமிட கடப்பில் பயணச்சீட்டும்
மீதிக் காசும் என்னோக்கி விரைந்தது
என் புறம் வந்தபின் ஒரு கை அதை வாங்கி
என்  முகம் நீட்டியது அக்கணம் என் மனம்
பல யுகம் தாண்டிய ஒரு உணர்வு;

எங்கோ கண்ட முகமோ இல்லை
ஏதோ பிறவியின் இணைப்போ இல்லை
கடவுள் அமைத்த விதியோ இல்லை
நீதான் என்னவளோ என்றெல்லாம் மனம்
கலந்துரையாடியது உள்ளே !

பயணச்சீட்டின் பரிமாற்றத்தில் அவள்
விரல் நுனி என் கையில் பட்ட சில
மணித்துளி என் உடல் என்றும் தந்திடா
பெரும்சுகம் தந்தது. உள்ளம் என்றும் கண்டிரா
கனவு கண்டது;

அவள் பார்வை பட்ட என் கண்களோ
உடன் செயலிழந்தது போலே  மேலும்
மேல் நோக்க திறன் இன்றி கீழ் நோக்கி
தன்னை தாழ்த்திக் கொண்டது ஆயினும்
அவள் முகம் நோக்க துடித்தது  !

அவள் மெல்லிய நீளக் கூந்தல்
காற்றின் வீரத்தால் பறக்க என்
மீது உரசிய ஒரு சில முடிகளால்
நான் மெய் சிலிர்த்துப் போய் காற்றுக்கு
நன்றிக் கடன் பட்டவனானேன்!

மாநிறத்தால் செம்மன பூசிய அவள்
முகமும், கைதேர்ந்த கலைச் சிற்பியின்
படைப்பு  போன்ற அவள் தோற்றமும்
உதட்டின் நுனியில் சிறு சிரிப்பும் என்னை
இன்ப சித்திரவதை செய்தது!

உன் செல்லத் தாக்கம் என்னை
நீ பார்ப்பாயா என ஏக்கம் பெற வைத்து
வாகன இரைச்சலின் இடையினில்
இன்ப மயமாய் பல பின்னணி இசைகள்
காதினில் ஒலித்தது!

அவள் கண் சிமிட்டும் ஒவ்வொரு
நொடியும் என இதய துடிப்போடு
இணைந்து கொண்டு ஒன்றாகி
அவள் இமைப்புகெல்லாம் என் இதயம்
சப்தமிட்டதை செவியுற்றேன் ;

அவள் கால்கள் முன்னோக்கி செல்ல
என் மனம்  நாடாமல் கடவுளை
நாடி அவள் நிறுத்தம் வராமல்
தடுப்பாயா என்றெல்லாம் புலம்பித்
தவித்தது ;

ஒரு கணம் என் எண்ணம் எல்லைத்
தாண்டி கற்பனையில் நீந்தத் தோன்றி
காதலில் மூழ்கித் தவித்து என்னை
கொள்ளை கொண்ட பேரழகியே
என்றெல்லாம் பாடியது!

இவ்வாறு என் காதல் அலையில்
தத்தளித்து மெய்மறந்து கண்ணயர்ந்த
தருணம் ஏதோ ஒரு ஒலி என்னை
இடைமறித்தது  இதுவே இறுதி நிறுத்தம்
இறங்கவேடுமென !

அதிர்ந்து போய் செய்வதறியே தடுமாறி
என் காதல் கோட்டை கற்பனையில்
தகர்ந்து போனதை உணர்ந்து கொஞ்சம்
மிரண்டு மெதுவாய் கீழிறங்கினேன்
பேருந்தை விட்டு!

என்னவளின் மோகத்தில் அவள்
முகத்தில் மதி மயங்கி என் நேர் முகத்
தேர்வை தொலைத்த போதிலும்
அவள் காலடி எந்த நிறுத்தத்தில்
பதிந்ததென்றே மனம் தேடியது !!!


படைப்பு: ராசிக் 

1 கருத்துகள்:

இவ்வளவு பெரிய கவிதை எழுதியிருக்கீங்க, அற்புதம்! தொடர்ந்து எழுத வாழ்த்துகள் :-)

amas32

கருத்துரையிடுக