வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

பிரிவின் ஏக்கம்





"இது கடல் கடந்து, மைல் கடந்து போய்  பணி புரிந்து கொண்டு   நம் உறவை தேடும் ஒவ்வொருவருக்கும் சமர்ப்பணம்!!!"

உலகம் இயந்திரமாய் சுழலும்
இவ்வேக மயத்திற்கு இடையே
நம் இடை விடா பணிக்கு இடையே
அன்னையின் முகம் தேடும் மனம்
அந்த சில மணித்துளிகள் !

பல மைல் கடந்து இல்லை கடல் கடந்து
நம் உடமைகளை உறவுகளை விட்டு
நம்  இனம் சாரா நம் மொழி சாராருக்கு
கீழாய் இல்லை அடிமையாய் செல்ல
நேர்வது மிகக் கொடுமை;

வார ஐந்து இல்லை ஆறு நாட்கள்
அதிகாலை முதல் இரவு  வரை
அணியில் இணங்கி பணியில் முடங்கி
கட்டாயமாய் களைத்து போக விடுகிறது
நம் பணத் தேவை;

நம் கடினம் அறியா நம் சோகம் அறியா
நம் நலம் மட்டுமே தேடும் குடும்ப
உறவுகள் அக்கரையில் கலங்க
அவர்கள் நலம் மட்டுமே நாடும்
நாம் இக்கரையில் உரைகிறோம்;

நாள்முழுதும் பல சுவையாய் மணமாய்
உணவு கண்ட நம் நாவு இன்று
வறண்ட பூமியின் நீர் ஏக்கம் போல்
நம் வீட்டு  உணவுகளை புசிக்க
ஏங்கி துவண்டு நிற்கிறது;

எச்சமயம் என்னாகுமோ ஏதாகுமோ
என்ற படபடப்பு நம் மனதிலும் நம்
உறவுகள் மனதிலும் உட்கொண்டு
தினம் தினம் நடுங்க வைக்கிறது
அந்த இடைவெளி தூரம்;

நம் உறவுகள் நிம்மதியாய் அங்கே
உறங்க நாம்  நாள்தோறும்  இங்கே
உறக்கம் குறைத்து இல்லை
உறக்கம் தொலைத்து படும் வேதனை
சொல்ல வார்த்தைகள்  இல்லை!

மனைவியின் நெருக்கமின்றி
குழந்தையின் கொஞ்சல்கள்  இன்றி
அன்பினை தள்ளி வைத்து பாசப் பிரிவினை
எண்ணி ஏங்கியே நாம் நாட்களை
தொலைப்பது மிகவும் அனுதாபம்;

நம் நலன் நோக்கி முன்பு அன்னையோ
தகப்பனோ திட்டிய சொற்களில்
வீறு கொண்ட நாம் இன்று
எவன் ஏச்சுக்கேல்லாம் கைகட்டி
வாய்பொத்தி பணிகிறோம்;

சுதந்திர பறவை போல் சிறகடித்து
பறந்த நாட்கள் போய் சிறகொடிந்த
பறவையாய் சிறைப்பட்டுக்  கொண்டு
வெளிவரும் நாட்கள் தேடி நாம்
விம்மி கொண்டிருக்கிறோம்;

வீடு செல்லும் நேரம் என்று வரும் என்ற
எதிர்பார்ப்பில் நம்  ஒவ்வொரு நாளும்
பொழுதும் மிதவை கப்பல் போல்
மெதுவாக நகர்ந்து செல்லும்
அந்த உணர்வு கொடியது !

தேய் பிறை போல் நாம் தேய்ந்து
நம் உழைப்பின் உச்சத்தை செலுத்தி
நம் நேச உறவுகளை வளர்பிறை போல்
வளர்ப்பதில் நாம் கிட்டும் மகிழ்ச்சி
மட்டுமே இதில் மிச்சம் !


படைப்பு: ராசிக்



0 கருத்துகள்:

கருத்துரையிடுக